அயல்நாட்டில்திருநங்கையர் ஓவியம்! -இந்து தமிழ் கட்டுரை

அயல்நாட்டில் திருநங்கையர் ஓவியம்! -இந்து தமிழ் கட்டுரை 

தி தமிழ் இந்து பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் ரவிக்குமார் கட்டுரை
Published :  22 Oct 2018  11:58 IST

மூகச் செயற்பாட்டாளர், கவிஞர், கல்வியாளர், பேச்சாளர் எனப் பல திறமைகளைக் கொண்ட திருநங்கை கல்கி சுப்ரமணியத்தின் அறிந்திராத இன்னொரு முகம், ஓவியர்.

பள்ளிப் பருவத்தில் பாலின மாறுபாட்டின் காரணமாகத் தன்னைக் கேலியும் கிண்டலும் செய்தவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள கல்கி நாடிய இடம் காடு.  “வானுயர்ந்த மரங்கள், பறவைகளின் ஓசை, மூங்கில்களின் உரசல், காய்ந்த இலைச் சருகுகளின் ஓசை போன்றவையெல்லாம் நான் கவிதை எழுத காரணிகளாகின. கூடவே, மனத் திரையில் பதிந்தவை  ஓவியங்களாவும் மாறின” என்கிறார் கல்கி.

 

வெளிநாட்டில் ஓவியக் கண்காட்சி

கியூபிஸம், ஸ்பான்டேனியஸ், ரியலிஸம் போன்ற பாணிகளில் இவர் வரைந்த ஓவியங்களை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் காட்சிக்கு வைத்திருக்கிறார். “ஓல்டன்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் கிளாடியாவின், அழைப்பையேற்று எனது சமூகச் செயற்பாடுகள், ஓவியப் படைப்புகள், கவிதைகள் குறித்து உரையாற்ற நவம்பரில் ஜெர்மனி செல்கிறேன். ஜெர்மனி மொழியில் எனது இரு கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

நான் வரைந்த ஓவியங்களைக் காட்சிப்படுத்தி அவற்றை விற்பதன்மூலம் கிடைக்கும் தொகையில் திருநங்கைகளுக்கான சமூகப் பணிகளைச் செய்துவருகிறேன். ‘சகோதரி’ அமைப்பின் மூலமாக ‘Trans/Hearts’ என்ற திட்டத்தைத் தொடங்கியிருக்கிறேன். இதன்மூலம் என்னிடம் ஓவியப் பயிற்சி எடுத்துக்கொண்ட திருநங்கை மாணவிகளின் ஓவியப் படைப்புகளையும் காட்சிப்படுத்துகிறேன்.

ஓவியப் பயிற்சி

அதில் அவர்களின் படைப்புகள் விற்பனையானால் அந்தத் தொகை முழுவதையும் அவர்களிடமே கொடுக்கிறேன்.  கனடா, ஆஸ்திரேலியா நாடுகளிலிருக்கும் பலரது வீடுகளை என்னுடைய  மாணவிகளின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. தமிழ்நாட்டுத் திருநங்கைகள் மட்டுமல்ல கேரளா, மேற்கு வங்கம் என இந்திய மாநிலங்களில் இருந்தும் உலக அளவில் பல நாடுகளிலும் ஓவியப் பயிற்சி அளிக்க அழைப்பு வருகிறது.

ஆர்வம்மிக்க திருநர்கள் என்னை www.sahodari.org என்ற இணையதளம் வழியாகத் தொடர்புகொள்ளலாம்” என்கிறார் கல்கி.